சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை – மகன் இருவரும் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு காவலர்கள் அப்ரூவலாக மாறி இருக்கின்றார்கள்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற கொடூர சம்பவம் அடுத்தடுத்து வெளியே வந்து கொண்டு இருக்கின்றது. இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட எஸ்ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை தொடர்ந்து சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் காவல்துறைக்கு எதிராக அளவுக்கதிகமான சாட்சியங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.
முதலாவதாக இந்த வழக்கு தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் நேரில் விசாரணை செய்தபோது அங்குள்ள பெண் காவலர் ரேவதி காவல்துறைக்கு எதிரான சாட்சியமாக மாறினார். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருக்கும் நடந்த துயரங்களை நேரில் கண்டதாக வாக்குமூலம் அளித்தார். மேலும் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் அங்கு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரையும் அப்ரூவராக மாறி உள்ளார்.
சிபிசிஐடி விசாரணையில் காவல்நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஒரு காவல் நிலையத்தில் நடந்த கொடூர நிகழ்வால் நிகழ்ந்த மரணத்திற்கு அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் ரேவதி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை காவலருக்கு எதிராக சாட்சியம் ஆக மாறி இருப்பது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியாயத்திற்காக இந்த இரண்டு காவலர்களும் நிற்கும் போது தமிழக மக்களின் முழு ஆதரவு இவர்களுக்குக் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம் தமிழக அரசு துரிதமாக சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இதற்கு சாட்சியமாக வாக்குமூலம் அளிக்கும் காவல் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் விருப்பமாக இருக்கிறது.