உலக யோகா நாள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21ம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டில் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுச்சபையில் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.
ஜூன் மாதம் 21ம் தேதி அவர் யோகா தினத்திற்கு ஏற்றதாக பரிந்துரைத்திருந்தார். அமெரிக்கா, கனடா, சீனா உட்பட பல நாடுகள் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஆதரித்தன. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் மாதம் 21ஆம் தேதியை உலக யோகா நாள் ஆக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. முதன்முறையாக 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.