Categories
அரசியல்

“Yoga for Humanity 2022″…. பல்வேறு கட்டுப்பாடுகளுடன்…. மைசூர் அரண்மனையில் யோகா தினம்….!!!

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஐநா சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்றைய நாளில் ஏராளமான பொதுமக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சி மேற்கொள்வதை ஒவ்வொரு வருடமும் பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக யோகாசன நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை.

இந்த வருடம் 75வது சுதந்திர ஆண்டும் ஓராண்டுக்கு கொண்டாடப்பட்டு வருவதால் அதனையொட்டி யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள முக்கியமான எழுபத்தைந்து இடங்களில் யோகா தினத்தின் போது பல தரப்பு மக்களும் கூட்டாக பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அவ்வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் நடைபெறும் யோகாசன பயிற்சியில் பிரதமர் மோடி மக்களுடன் இணைந்து யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி ஜூன் 21ஆம் தேதியன்று மைசூர் அரண்மனை வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையிலான “மனித குலத்திற்கான யோகா” என்ற கருப்பொருளுடன் 8வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த கொண்டாட்டங்களுக்கு இதுவரை 12 ஆயிரம் யோக ஆர்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவர்களின் எண்ணிக்கை 15,000 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை மத்திய அரசு முழுமையாக நிர்வகிக்கும். மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மட்டுமே மாநில அரசு செயல்படுத்தும்.

பங்கேற்பாளர்களை பொறுத்தவரையில் தரத்தில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டாம் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. முதல்வர் பசவராஜ் பொம்மை தலைவராகவும், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் துணை தலைவராகவும் 23 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்பார்வை இடுவார். மேலும் அரண்மனை வளாகத்தில் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் யோகா ஆர்வலர்களுக்கு 17 பிளாக்குகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் விஐபிகளுக்கு 2 பிளாக்குகளும், பங்கேற்பாளர்களுக்கு 15 பிளக்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அமைப்பிலும் மாணவர்கள், தொழிலாளர்கள், தினக் கூலிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்,ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பிற சமூகத்தினர் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த சுமார் 1000 பங்கேற்பாளர்கள் தங்க வைக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் 170 நடமாடும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் யோகா பாய்,மொபைல் பைகள் மற்றும் ஷு பைகள் ஆகியவை ஆயுஸ் அமைச்சகத்தால் வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் அனைவரும் காலை 5.30 மணிக்கு முன்னதாகவே மைதானத்தை அடைய வேண்டும்.

அதன்பிறகு நுழைவு வாயில்கள் மூடப்படும். பங்கேற்பாளர்கள் அரங்கிற்குள் நுழைவதற்கு முன்பு தெர்மல் ஸ்கிரீனிங் செய்யப்படும். நிகழ்ச்சிக்கு பிறகு பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மாநில அரசு காலை உணவை ஏற்பாடு செய்யும். இதில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும். குறிப்பாக நிகழ்ச்சிக்கு முன்பும் பின்னும் தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள் அந்தந்த இடத்தில் இருப்பார்கள். காய்ச்சல்,இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறி உள்ளவர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி பேபி மாபெரும் யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Categories

Tech |