கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குஜராத் சமாஜத்தில் மோடியின் மகள் என்ற திட்டம் நடைபெற்றது. இந்த திட்டத்தின்படி 5 வயது முதல் 12 வயது வரை உள்ள தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார். இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கல்வி கற்ற மற்றும் திறமை வாய்ந்த குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்து நலனை பேணி காப்போம். நாட்டில் 90 சதவீதம் ஆண்கள் இறப்பதற்கு மது மட்டும்தான் காரணம். தமிழக அரசு இளம் விதவைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
என்னுடைய தொகுதிக்குட்பட்ட ஒரு பகுதியில் கூட மதுபான கடையை தற்போது திறந்து இருக்கிறார்கள். தமிழக முதல்வர் போதை பொருட்களை அடியோடு ஒழிப்போம் என்று கூறுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு பேச்சு தான். மதுபானங்களால் 40 வயதுகுட்பட்ட ஆண்கள் இறந்துள்ளனர். இவர்களுடைய குடும்பங்களுக்கு மது கடையை நடத்தும் அரசு தான் பதில் சொல்ல வேண்டும். இந்த தீபாவளி பண்டிகையின் போதாது குடும்பங்கள் நிம்மதியாக இருப்பதற்காக 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடையை மூடுங்கள். அதை விட்டுவிட்டு மது விற்பனைக்கு இலக்கு வைத்தால் அது ஒரு நல்ல அரசாங்கமே கிடையாது.
இந்நிலையில் திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி மொழியானது கற்றுக் கொடுக்கப்படும் நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தான் பிற மொழியை கற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றனர். இவர்களும் இன்னொரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தான் மத்திய அரசு வலியுறுத்துகிறது. நம்முடைய பிரதமர் மோடியும் அனைவரும் தாய் மொழியில் படியுங்கள் என்று தான் கூறுகிறார். அதோடு மருத்துவ படிப்பு உட்பட அனைத்து படிப்புகளையும் தாய்மொழியில் கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறார். மேலும் முதல்வர் ஸ்டாலின் எதற்காக தாய் மொழியில் கற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்று கூறினார்.