பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் ஏக்தா கபூர். இவர் ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல வருடங்களாக வெற்றிகரமான தயாரிப்பாளராக கொடி கட்டி பறக்கிறார். ஒரு சர்ச்சைக்குரிய படம் என்றாலும் அதை தயாரிப்பதற்கு ஏக்தா கபூர் தயங்க மாட்டார். இவர் தற்போது ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளியான ட்ரிபிள் எக்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ராணுவத்தில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் அவர்களுடைய மனைவிகளை பற்றிய தரக்குறைவான காட்சிகளை பதிவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏக்தா கபூருக்கு கடுமையான வார்னிங் விடுத்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது, நீங்கள் நாட்டில் வசிக்கும் இளைய தலைமுறையினரின் மனதை கெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளீர்கள். இன்று ஓடிடி தளங்களில் அனைத்து விதமான விஷயங்களும் கிடைக்கும் நிலையில் நீங்கள் மக்களுக்கு எந்தவிதமான சாய்ஸ்களை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இளைஞர்களின் மனதை கெடுத்துக் கொண்டிருக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறீர்கள். என்று காட்டமாக கூறினார்கள்.
அதன்பிறகு ஏக்தா கபூருக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞரிடம், இது போன்ற வழக்குகளுக்காக மட்டும் தான் நீங்கள் வருகிறீர்கள். இதை நாங்கள் பாராட்ட முடியாது. இந்த நீதிமன்றம் வலிமையானவர்களுக்காக செயல்படவில்லை. குரல் கொடுக்க முடியாத ஏழை, எளிய மக்களுக்காக செயல்படுகிறது. நீங்கள் இனி இது போன்ற ஒரு பெட்டிஷனை கொண்டு வந்தால் அதற்கு நாங்கள் சரியான விலை வைக்க நேரிடும். இதை நீங்கள் உங்களுடைய கட்சிக்காரரிடம் தெரிவியுங்கள் என்று நீதிபதிகள் காட்டமாக கூறினார்கள். மேலும் ஏக்தா கபுரின் மீது பிகாரில் உள்ள ஒரு நீதிமன்றத்திலும் அந்த வெப் சீரிஸ் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதில் அவருக்கு வாரண்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.