நாடு முழுவதும் இயக்கப்படும் 200 சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகின்றது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் டுபட்டு வருகின்றது. ஒவ்வொரு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது நான்காம் கட்டத்தில் தொடர்கிறது. மே 31ம் தேதி வரை 4ஆம் கட்ட ஊரடங்கு தொடரும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த போதே பல்வேறு தளர்வுகளையும் அறிவித்தது. மாநிலத்தில் தளர்வுகளை மேற்கொள்ளுவதை மாநில அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இதனிடையே நாட்டின் முக்கிய 15 நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்ற மத்திய அரசு அதனை செயற்படுத்தி வருகின்றது. இதில் தமிழகத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் தமிழகத்துக்கு தற்போதைக்கு ரயில் சேவை வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு டைலகத்துக்கான சிறப்பு ரயில் சேவையை ரத்து செய்தது.
இந்நிலையில்தான் நேற்று முன்தினம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் வருகின்ற, ஜூன் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ஏசி இல்லாத ரயில்களாக இயக்கப்படும் இந்த ரயில்கள் குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும். இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து நேற்று இரவு இந்தியன் ரயில்வே இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கும் என்றும் தெரிவித்து, சிறப்பு ரயிலுக்கான அட்டவணை வெளியிட்டதில் தமிழகத்திற்கான சிறப்பு ரயில்கள் எதுவுமே இடம்பெறவில்லை. இது தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு ஏமாற்றமாகவே இருக்கிறது. தமிழக முதல்வரும் தற்போதைய சூழ்நிலையில் ரயில் சேவை வேண்டாம் என்று தெரிவித்த நிலையில் ஜூன் 1-ஆம் தேதி நாடு முழுவதும் இயக்கப்படும் 200 சிறப்பு ரயில்களில் தமிழகத்திற்கு ஒரு ரயிலும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.