உங்கள் மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டிர்கள் என்று சுப ஸ்ரீ வழக்கில் பேனர் வைத்த அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிகழ்ச்சிக்காக சாலை நடுவே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியதால் அவர் உடல் நசுங்கி பலியானார். இதையயடுத்து பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு 12 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தனது மகனின் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், மக்களுக்கு துன்பம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் உங்கள் மகளை வரவேற்க இன்னொருவரின் மகளை கொன்று விட்டீர்கள் என்று மனுதாரர்களுக்கு கண்டனம் தெரிவித்ததோடு சம்பவத்திற்குப் பிறகு நீண்ட நாள் ஏன் தலைமறைவாக இருந்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக ஜெயகோபால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை தொடர்ந்து வழக்கை 17 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.