ஒரு குழந்தை வெறும் குழந்தை மட்டும்தானா. இல்லை. நல்ல மனிதனாக அது வளர வேண்டும் என்றால் அம்மாவின் பங்கு இங்கே அவசியம் தேவை. அதில் குழந்தை வளர்ப்பு என்றால் வெறும் சாதம் ஊட்டுவதும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அதோடு கடமை முடிந்ததாக நினைப்பதும் என்று பல தவறுகள் அம்மாக்கள் செய்வதுண்டு. அம்மாக்கள் குழந்தையை வளர்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
- உங்கள் குழந்தையை அருகில் இருக்கும் வளரும் குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள். அதற்கு பதிலாக உங்கள் குழந்தை கொண்டுள்ள நல்ல குணங்களை பாராட்டுங்கள். தவறு செய்கையில் அது தவறு என்பதை அதன் மொழியில் புரிய வையுங்கள்.
- கோபம் வந்தால் பொருள்களை உடைப்பது, வீசி எறிவது , அடிப்பது போன்ற காரியங்கள் குழந்தைகளை செய்ய அனுமதிக்காதீர்கள். கொஞ்ச நேரம் வீட்டிற்கு வெளியே நிற்க வையுங்கள். தனிமை அவர்களுக்கு பயத்தை கொடுக்கும்.
- மிக சிறிய தவழும் குழந்தைகள் நடக்க தொடங்கும் குழந்தைகள் உடன் நிச்சயமாக அம்மாவாகிய நீங்கள் நேரம் செலவழிக்க வேண்டும். அவர்களோடு விளையாட வேண்டும்.
- குழந்தைகள் தவறு செய்ததை நீங்கள் அறிந்தால் நிச்சயம் கண்டிக்க வேண்டும். கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது. கண்டிப்பு என்பது அதற்கு புரியும் வகையில் கண்டிக்க வேண்டும். கண்டிப்பில் கடுமை வேண்டாம். சற்று நேரம் பேசாமல் இருப்பது போன்றவற்றை செய்யலாம்.
- குழந்தைகள் அவர்கள் சூழலை அனுசரித்துதான் தங்கள் நடவடிக்கைகளை செய்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நீங்கள் கத்துவது சண்டையிடுவது போன்றவற்றை செய்யாதீர்கள். முக்கியமாக குடும்ப சண்டைகளை அவர்கள் முன்னிலையில் தவிருங்கள்.
- குழந்தைக்கு என்ன விருப்பமோ எது நன்றாக வருமோ அதனை அதன் போக்கில் செய்ய விடுங்கள். டிவி நிகழ்ச்சியில் பாடும் ஆடும் குழந்தைகள் போல நம் பிள்ளை இல்லை என்று உங்கள் விருப்பத்தை அதன் மேல் திணிக்காதீர்கள்.