ஈரான் மீது உள்ள பொருளாதார தடைகள் நீக்கப்படாது என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட ஆறு வளர்ந்த நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஈரானுக்கு தங்களது ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்டளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு வரம்புகளும் விதிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறி டொனால்ட் டிரம்ப் இதில் இருந்து விலகினார். ஈரான் மீது அடுத்தடுத்த பொருளாதாரத் தடைகளையும் டிரம்ப் விதித்தார். தொடர்ந்து தடைகள் விதிக்கப்பட்டதால் கோபமடைந்த ஈரான் பதிலடியாக அணுசக்தி ஒப்பந்த விதிகளை மேலும் மீறியது. இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டிருந்த டெஹ்ரானுக்கு தெற்கே உள்ள போர்டோ என்ற மலைக்கு அடியில் உள்ள ஆலைகளில் யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது.
இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாவது, கடந்த 2015ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு ஈரான் சம்மதிக்கும் வரை அந்நாட்டின் மீது உள்ள பொருளாதார தடைகள் நீக்கப்படாது என்று உறுதியாக தெரிவித்தார்.