Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற ராஜன்…. சிறை பிடிக்கப்பட்ட இளம்பெண்கள்…. தி.மலையில் பரபரப்பு…!!

கடனாக வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காததால் ஒருவர் இளம்பெண்களை வீட்டிற்குள் பூட்டி சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் கூலி தொழிலாளியான ரகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற மைத்துனர் இருக்கின்றார். இவர் ஆரணி அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜன் ரகுவுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக அளித்துள்ளார். அதில் ரகு 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார்.

ஆனால் மீதம் கொடுக்க வேண்டிய 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை நீண்ட நாட்களாக ரகு கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் ராஜன் ரகுவின் வீட்டிற்கு பணம் கேட்பதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் ரகுவும் அவரது மனைவியும் இல்லாததால் கோபமடைந்த ராஜன் அங்கிருந்த அவரது மகள்கள், உறவினர் பெண்கள் என 4 பேரையும் சிறை வைத்து பூட்டு போட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். மேலும் ராஜன் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் நடந்தவை அனைத்தையும் ரகுவின் மகள்கள் செல்போன் மூலம் தங்களது பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆரணி டவுன் காவல் நிலையத்தில் ரகு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டில் இருந்த 4 இளம்பெண்களையும் மீட்டுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் ராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |