வீட்டிலிருந்த தம்பதியை மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுக்பீர் மோனிகா தம்பதியினர். திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையில் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்கள் வீட்டிற்கு பால் பாக்கெட் போடும் நபர் வெகுநேரமாக அழைப்பு மணியை அடித்தும் யாரும் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் கொண்ட நபர் உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த அவர்கள் இருவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ள தொடங்கினார்.
அதில் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளில் வீட்டிற்கு 4 பேர் பைக்கில் வந்தது பதிவாகியிருந்தது. வந்தவர்கள் கணவன் மனைவி இருவரையும் கட்டிப்போட்டு சுட்டுக் கொலை செய்ததோடு வீட்டில் இருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது கொள்ளையடிப்பதற்காக நடந்த கொலையா அல்லது காவல்துறையினரை திசை திருப்புவதற்காக பணம் நகை கொள்ளை அடிக்கப்பட்டதா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.