Categories
கிரிக்கெட் விளையாட்டு

விமர்சனங்களுக்கு பேட் கொண்டு பதிலளிப்பேன் – ப்ரித்வி ஷா

விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதில் அளிக்க விரும்புகிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா கூறியுள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ப்ரித்வி ஷா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது “நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் மூலம் இந்திய அணிக்கு திரும்பி உள்ளேன். எல்லாம் நல்ல விதமாக இருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக உத்வேகம் தகர்ந்து விட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் தேசத்தின் நன்மை மட்டுமே முக்கியம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மிக விரைவில் இந்த நிலை சரியாகும் எனவும் நம்புகிறேன். இந்தத் தொற்று நோய் பிரச்சனை வராமல் இருந்திருந்தால் இச்சமயம் ஐபிஎல்  போட்டியில் விளையாடி கொண்டு இருந்திருப்பேன். கிரிக்கெட் நமது கலாச்சாரத்தில் ஒன்றாகி விட்டாலும் இப்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து மீண்டு வருவதில் தான் தீவிரம் காட்ட வேண்டும். தொடர்ந்து உடல் தகுதியுடன் இருக்க வீட்டிலேயே வழக்கமான உடற்பயிற்சிகளை செய்து கொள்கிறேன். எனது பழைய ஆட்டங்களில் வீடியோக்களை பார்த்து அதிலிருந்து கற்று முன்னேற்றம் காண இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி வருகிறேன்.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையை வென்றதும் அறிமுக டெஸ்டில் சதம் விளாசியதும் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாகும். அதேபோன்று ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதும் அதனால் பாதிக்கப்பட்டதும் மிகவும் மோசமான தருணம் ஆகும். ஒரு விளையாட்டு வீரராக எந்த மருந்தை எடுத்துக் கொண்டாலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சிறிய மருந்தாக இருந்தாலும் கிரிக்கெட் வாரிய டாக்டர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகே சாப்பிட வேண்டும். அந்த மருந்து தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பட்டியலில் இருக்கிறதா என்பதை மருத்துவர்களிடம் கேட்பதே நல்லது.

எனது நிலையை பாருங்கள் இருமலுக்கு மருந்து சாப்பிட்டேன், அந்த மருந்து தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்தது கூட தெரியாமல் பிரச்சனையில் சிக்கி தண்டனையாக எட்டு மாத தடை விதிக்கப்பட்டது.. அந்த தவறிலிருந்து அதிகம் கற்றுக் கொண்டேன் இப்போதெல்லாம் சாதாரண மருந்தை கூட கிரிக்கெட் வாரிய மருத்துவர்களிடம் ஆலோசித்த பின்னரே சாப்பிடுகிறேன். கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்த அந்த காலகட்டம் மிகவும் மோசமானதாகும் மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் இருந்தது. இது போன்ற ஒரு சூழல் வேறு எந்த ஒரு வீரருக்கும் ஏற்பட கூடாது.

எல்லாரையும் எப்போதும் திருப்திபடுத்த முடியாது என்பதே நான் கற்றுக் கொண்ட பாடம். ஆட்டம் குறித்து விமர்சனங்கள் விளையாட்டின் ஒரு அங்கம் தான்.  அந்த விமர்சனங்களை ஆக்கபூர்வமாக எடுத்து விளையாட்டில் ஆற்றல் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். 2019 ஆம் ஆண்டு எனக்கு நல்ல ஆண்டாக அமையவில்லை ஆனாலும் ஒரு சில ஆறுதலான விஷயங்கள் நடந்தது. அனைத்துவிதமான விமர்சனங்களுக்கும் பேட் மூலம் பதிலடி கொடுக்க விரும்புகிறேன்” இவ்வாறு ப்ரித்வி ஷா கூறினார்.

Categories

Tech |