சுவிட்சர்லாந்தை சேர்ந்த இளம்பெண், குடியுரிமை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தில் இருக்கும் தன் காதலனுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்.
26 வயதான சோமாலிய இளைஞர், 6 ஆண்டுகளுக்கு முன் சுவிட்சர்லாந்திற்கு அகதியாக வந்திருக்கிறார். அதன்பின்பு, சில மாதங்கள் கடந்த நிலையில் சூரிச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழகி, இருவரும் காதலிக்கத்தொடங்கினர். அதன் பின்பு திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
எனவே, கடந்த 2015 ஆம் வருடத்தில் அந்த இளைஞர் குடியுரிமை கோரியுள்ளார். எனினும் ஒரு வருடம் கழித்து அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு சென்றும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அந்த இளைஞர் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற மறுத்திருக்கிறார். எனவே அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
தற்போது, அந்த இளைஞர், சூரிச் விமானநிலையத்தின் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக அவரின் காதலி Angelique கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், சோமாலியாவுக்கு அவர் திரும்பச்சென்றால், அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். அவரை கைது செய்து கொடுமைப்படுத்த வாய்ப்பிருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், அவருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், அவரின் குடும்பத்தை சேர்ந்த பலர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். எனவே, தன் காதலரை நாட்டை விட்டு வெளியேற விட மாட்டேன் என்று உறுதி கூறியுள்ளார்.