இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தனியாக இருந்த இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பர்சோலி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் சிங். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கன்வர் சிங் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கன்வர் சிங் கொலை செய்யப்பட்டார். இந்த தகராறில் பலருக்கும் காயம் ஏற்பட பிரதீப் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து கன்வரின் உறவினர்கள் பிரதீப் சிங் குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கத்துடன் காத்திருந்தனர். இந்த நிலையில் பிரதீப் சிங்கின் மனைவி கணவரை காண சென்றிருந்தார். அச்சமயம் அவர்களது மகள் ஷரதா வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டின் வாசலில் இருந்த குழாயில் ஷரதா தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த சமயம் அங்கு வந்த 3 பேர் அவரது கை கால்களை கட்டி போட்டு உயிருடன் தீவைத்து எரித்துள்ளனர்.
உடல் முழுவதும் நெருப்பு பரவியதால் ஷரதா வலியால் அலறி உள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழக்கும் முன்பு தன்னை 3 பேர் கொடுமைப்படுத்தி உயிருடன் தீ வைத்து எரித்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனை வைத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.