பாகிஸ்தான் நாட்டில் மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தை கடைபிடிக்கும் பெண்களை அவர்களின் குடும்பத்தினரே கொலை செய்யும் கொடூரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2016-ம் வருடத்தில் நடிகை மற்றும் மாடல் அழகியாக இருந்த கந்தீல் பலூச் என்ற பெண்ணை அவரின் சகோதரர் ஆணவக்கொலை செய்த சம்பவம் உலக நாடுகள் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அதே போன்று ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ஒகாரா மாவட்டத்தில் வசிக்கும் 21 வயதுள்ள இளம் பெண்ணான சித்ரா, மாடல் அழகி மற்றும் நடன கலைஞராக இருக்கிறார். ஆனால் அவரின் குடும்பத்தினருக்கு அவர் மாடல் துறையில் இருப்பதில் விருப்பமில்லை. இது பாரம்பரியத்திற்கு எதிராக இருப்பதாக கூறி மாடலிங் துறையை விட்டு வருமாறு அவரை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
சித்ரா, அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் சித்ராவின் உறவினர் ஒருவர் அவர் பொதுவெளியில் நடனமாடிக் கொண்டிருக்கும் வீடியோவை அவரின் சகோதரருக்கு அனுப்பியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவரின் சகோதரர் ஹம்சா, சித்ரா உடன் சண்டையிட்டிருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து, வாக்குவாதம் முற்றியதில், ஹம்சா, சித்ராவை சரமாரியாக தாக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டார். தற்போது, அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.