செல்போன் பேசக்கூடாது என கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நல்லியக்கோடன் நகர் பகுதியில் வேலு என்ற ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில் முருகன் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு புதுக்குப்பம் பகுதியில் வசிக்கும் பட்டதாரியான விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு விஜயலட்சுமி அடிக்கடி செல்போனில் பேசியதால் செந்தில்முருகன் சந்தேகப்பட்டு மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த விஜயலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக விஜயலட்சுமியை மீட்டு திண்டிவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பின் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமியின் தந்தை சின்னராசு தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செந்தில் குமாரின் குடும்பத்தினரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.