கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பச்சிகானப்பள்ளி பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு சத்யவதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவி அதே பகுதியில் வசிக்கும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை காதலித்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் சத்தியவதியை கண்டித்துள்ளனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்று சத்யவதி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.
இதனையடுத்து வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் சத்யவதி சடலமாக கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.