இளம்பெண் விஷம் கொடுத்து தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அகரம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 வயதான எல்லையா என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகம்மாள் தனது மகனுக்கு விஷத்தை கொடுத்து, தானும் அதனை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் தாய் மற்றும் குழந்தையை மீட்டு உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தாய்-மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதன்பின் பாதிரிவேடு காவல் நிலையத்தில் தனது மகள் நாகம்மாளின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.