குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி கிராமத்தில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜதுரைக்கு சூர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்த சூர்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூர்யாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து உறவினர்கள் சூர்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜதுரை, அவரது தந்தை ராமச்சந்திரன் மற்றும் தாய் சீதை ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.