விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எலவடை கிராமத்தில் செல்லன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு அருகில் இருக்கும் விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகை மற்றும் பணம் போன்றவற்றை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து செல்லன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் மொரப்பூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மடத்தானூர் பகுதியில் வசிக்கும் முருகன் என்பதும், செல்லன் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது இவர்தான் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் திருடிய நகையை விற்க சென்ற போது காவல்துறையினரிடம் சிக்கி கொண்டார். இதனையடுத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.