15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்ததால் வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக கூறி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவ ஊழியர்கள் விசாரித்ததில் அந்த சிறுமிக்கு 15 வயது தான் ஆகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுமிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியை ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் மகேஸ்வரன் என்பவர் காதலித்து திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது. தற்போது சிறுமிக்கு 15 வயதே ஆவதால் காவல்துறையினர் மகேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.