மின் கம்பத்தின் மீது ஏறி நின்று வாலிபர் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பாரிமுனை பேருந்து நிலையம் அருகே அரை நிர்வாண கோலத்தில் 35 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். இந்த வாலிபர் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவர்கள் மீது கல்லை எடுத்து வீசியுள்ளார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அந்த வாலிபரை அங்கிருந்து விரட்டி உள்ளனர். இந்நிலையில் திடீரென அந்த வாலிபர் அங்கிருந்த மின்கம்பத்தின் மீது வேகமாக ஏறியுள்ளார். அதன்பின் பொதுமக்களைப் பார்த்து அந்த மின் கம்பத்தில் ஏறி நின்றபடியே மீண்டும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை கீழே இறங்குமாறு கூறிய பிறகும், அவர் இறங்காமல் மின்கம்பத்தின் மீது நின்று கொண்டிருந்தார்.
இதனால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின் கம்பத்தின் கீழ் வலையை விரித்து அந்த வாலிபரை பத்திரமாக மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் நெல்லை மற்றும் தூத்துக்குடி வட்டார பேச்சு வழக்கில் பேசியதால் தென் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபரை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் ஒப்படைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.