வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபரை 4 பேர் கத்தியால் குத்தி விட்டு தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியகுளம் எரிமேடு பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரிப் படிப்பு படித்த இமானுவேல் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இமானுவேல் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது திடீரென 4 பேர் கொண்ட மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கத்தியால் இமானுவேலை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனை அடுத்து படுகாயமடைந்த இம்மானுவேலை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மர்ம கும்பல் விபரம் குறித்தும், அவர்கள் ஏன் இம்மானுவேலை தாக்கினர் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.