மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் காவல் அதிகாரியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகர கட்டுப்பாட்டு நிலையத்திற்கு பிராட்டியூர் பகுதியிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் தனது வீட்டின் முன்பு இளைஞர் ஒருவர் தகராறு செய்து கொண்டிருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறை அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளைஞனை பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த இளைஞன் தனது உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்திருந்ததால் காவல் அதிகாரியால் அவரை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அந்த இளைஞன் தன் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் காவல் அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த காவல் அதிகாரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் காவல் அதிகாரியை தாக்கிய இளைஞனை அப்பகுதியில் இருந்த மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அந்த இளைஞனிடம் விசாரணை நடத்திய போது அவர் பெயர் பாலமுருகன் என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி என்பதும் தெரியவந்ததுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.