நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காக சென்ற கூலி தொழிலாளி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்லபட்டி பகுதியில் நேதாஜி என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேதாஜி தனது நண்பர்கள் 11 பேருடன் இணைந்து சிறுமலை நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து மலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பிறகு நேதாஜிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் வீட்டிற்கு திரும்பி செல்வதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.
அதன்பிறகு அவரை வீட்டிற்கு செல்லுமாறு கூறிவிட்டு அவரது நண்பர்கள் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து குளிக்க சென்ற நண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு திரும்பிய பிறகும், நேதாஜி மட்டும் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரது தாயார் தனது மகன் குறித்து அவரது நண்பர்களிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பாதி வழியிலேயே நேதாஜி வீடு திரும்புவதாக கூறியதை அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சிறுமலை பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு இறந்து கிடந்த நேதாஜியின் உடலை கைப்பற்றி நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.