ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு வீரேந்திரன் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றம் வீரேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து வீரேந்திரன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
தற்போது வீரேந்திரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவு, வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் போன்றவற்றை நினைத்து மன உளைச்சலில் இருந்த வீரேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரேந்திரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் வீரேந்திரன் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த கடிதத்தில் அன்புள்ள அம்மா, இரண்டு அக்கா, மாமா ஆகியோரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் உங்களுக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன் எனவும் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.