ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி ஏர்போர்ட் ரோடு பகுதியில் பிரேம்குமார் என்ற பி.பி.ஏ பட்டதாரி வசித்து வந்துள்ளார். இவர் சென்னைக்கு வேலை தேடி செல்ல முடிவு செய்து குருவாயூர் எக்ஸ்பிரசில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருக்கும்போது, படியில் நின்று கொண்டிருந்த பிரேம்குமார் நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்ததால் ரயிலின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து உடனடியாக பிரேம்குமாரின் தாயார் சிவகாமிக்கு அவரது சட்டைப்பையில் இருந்த செல்போன் மூலம் அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தனது மகனின் உடலை பார்த்து சிவகாமி கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.