அடுத்த மாதம் திருமணம் நடைபெறப்போகும் நிலையில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வீட்டிபடி பகுதியில் முகமது சாலீக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பக்கனா பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கும் வரும் ஜூன் மாதம் 17ஆம் தேதி திருமணம் நடத்த இரு குடும்பத்தினரும் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் முகமது மினி லாரியில் பசுந்தேயிலை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரியில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது மினி லாரி டிரைவர் முகமது லாரியில் ஏறி விட்டதாக தவறுதலாக நினைத்து வாகனத்தை இயக்கி உள்ளார்.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த முகமதின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமதுக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து நெலாக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.