இலங்கையில், பட்டம் விட்ட இளைஞர் அதனுடன் சேர்ந்து அந்தரத்தில் பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை, யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய பட்டங்களை ஒன்று சேர்த்து கட்டி, பறக்கவிட இளைஞர்கள் முயற்சித்துள்ளனர். எனவே, மிகப்பெரிய பட்டங்களை உருவாக்கினர். அதன்பின்பு அதிகமாக காற்று வீசக்கூடிய பகுதியில், பட்டத்தை ஒன்று சேர்த்து பறக்க வைக்க தயாராகினர்.
அதன்படி, முன்புறத்தில் சில இளைஞர்களும், அவர்களின் பின்புறத்தில் சில இளைஞர்களும், பட்டத்தின் கயிறை பிடித்துக்கொண்டு நின்றனர். அப்போது, முன்புறத்தில் நின்ற இளைஞர்கள் கயிறை விடுவதற்கு, முன்பாக பின்புறம் நின்ற சில இளைஞர்கள் கயிறை விட்டுவிட்டார்கள்.
அடுத்த நொடியே காற்றின் வேகத்தால் முன் பக்கம் நின்ற இளைஞர் பட்டத்துடன் பறந்தார். வானத்தில் அதிக உயரத்தில் அவர் பறந்து விட்டதால், அவரைக் கீழே இறக்குவதற்கு இளைஞர்கள் போராடினர். இந்நிலையில் காற்றின் வேகம் சிறிது குறைந்து, பட்டம் தானாக கீழே இறங்கியது. அப்போது அவர் கயிற்றை விட்டதால் கீழே விழுந்து காயமடைந்தார். எனினும் அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் உயிர் பிழைத்திருக்கிறார்.