கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை வாங்காமல் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கட்டிட காண்டிராக்டரான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கடந்த 12-ஆம் தேதி வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கண்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் எண், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் போன்றவற்றை வைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் வாகைகுளம் பகுதியில் வசிக்கும் சங்கிலிபூதத்தார், குரு, ராஜா நல்லதுரை ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டு கைதிகள் தாக்கி உயிரிழந்த முத்துமணி என்பவரின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு கண்ணனை கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் கண்ணனின் உடலை வாங்க மறுத்து மூன்றாவது நாளாக அவரது உறவினர்கள் வடக்கு தாழையூத்து பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவரது உறவினர்கள் அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், அரசு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சுமார் மூன்று மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் உறவினர்கள் சமாதானம் ஆகாததால் அப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.