நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் பொன்னுசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பொன்னுசாமி அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அதே பகுதியில் வசிக்கும் சிவா என்பவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து பொன்னுசாமி அருகே சென்று கொண்டிருந்த போது சிவா மோட்டார் சைக்கிளில் அதிகமான ஒலி எழுப்பி மோதுவது போல் சென்றுள்ளார்.
அப்போது பொன்னுசாமி நான் ஓரமாக தானே போகிறேன் ஏன் இப்படி வேகமாக வருகிறாய் என்று சிவாவிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கீழே கிடந்த கட்டையை எடுத்து சிவா பொன்னுசாமியை பலமாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து படுகாயமடைந்த பொன்னுசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் சிவாவை வலை வீசி தேடி வருகின்றனர்.