மர்ம நபர்கள் வாலிபரின் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு பகுதியில் சின்ராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பொன்மலைப்பட்டி கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்த சின்ராசுவை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனையடுத்து உயிருக்கு பயந்து ஓடிய சின்ராசுவை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சுற்றி வளைத்து அவரது தலையை துண்டித்து பயங்கரமாக கொலை செய்துள்ளனர். இதனை பார்த்ததும் பொது மக்கள் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்ராசுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக சின்ராசு வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.