சமாதானம் செய்ய சென்றவரை சிறுவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி திருவள்ளுவர் நகரில் திலகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 20 வயதுடைய பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன் தனது நண்பர்களைப் பார்ப்பதற்காக கேம்பெ நகருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பிரவீன் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சற்று தொலைவில் 17 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுவர்கள் செல்போனில் விளையாடியுள்ளனர். அப்போது செல்போன் பார்ப்பது தொடர்பாக சிறுவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதனை பார்த்ததும் உடனடியாக அங்கு ஓடிச் சென்று பிரவீன் அந்தச் சிறுவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது ஒரு சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரவீனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் பிரவீன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மூன்று சிறுவர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர்.