சாக்கு மூட்டையிலிருந்து கொலை செய்யப்பட்ட வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அருகே இருக்கும் நம்பியாற்றில் பழைய சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. மேலும் அந்த சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலமாக கிடந்ததை பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் பனங்குடி பகுதியில் வசிக்கும் அஜித் குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வீட்டிலிருந்து வெளியே சென்ற அஜித் குமாரை மர்மநபர்கள் குத்தி கொலை செய்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக அஜித்குமாரின் சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி ஆற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அஜித் குமாரை கொலை செய்த மர்ம நபர்களின் விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.