காவல்துறையினரை அவதுறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் கடந்த மாதம் 30ஆம் தேதி மங்கலம் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த அரியநாதபுரம் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி என்ற இளைஞனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் 2 1/2அடி நீளம் கொண்ட வாள் இருந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரித்த போது விநாயகமூர்த்தி காவல்துறையினரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த வாளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் விநாயகமூர்த்தி மணல் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதனை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் விநாயகமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் விநாயகமூர்த்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.