மனைவியை அடித்து கொன்ற கணவன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கப்பலூர் மேட்டு காலனி பகுதியில் விவசாயியான துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மனைவி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு துரைராஜ் வளர்மதி என்ற பெண்ணை 2 – வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அஜித்குமார் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 14 – ஆம் தேதியன்று துரைராஜ் – வளர்மதிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஆத்திரமடைந்த துரைராஜ் விறகு கட்டையால் வளர்மதியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் வளர்மதி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துரைராஜை வலைவீசித் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் துரைராஜ் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.