காய்ச்சலுக்கு ஊசி போட்டுக் கொண்ட இளம் பெண் திடீரென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏரியூரைச் சார்ந்தவர்கள் முத்துப்பாண்டி-செல்வபிரியா தம்பதியினர். செல்வபிரியா கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சல் சளியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் நேற்று மாலை 6 மணியளவில் செல்வபிரியா மதகுபட்டியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவருக்கு ஊசி போட்டுள்ளார்.அதன்பின் ஒரு சில நிமிடங்களில் அவர் அங்கேயே மயக்கமடைந்து விழுந்ததால் அவரை உடனே ஆம்புலன்ஸில் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து செல்வபிரியாவின் தாய் சின்னம்மாள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக மதகுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததையடுத்து செல்வபிரியாவின் உடல் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.