டிக் டாக்கிற்கு பதிலாக மற்றொரு செயலியை அறிமுகப்படுத்தி திருப்பூரை சேர்ந்த இளைஞர்கள் அசத்தியுள்ளனர்.
இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றம் நிலவி வருவதன் காரணமாக சீன பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. அதே சமயம் சீன நிறுவனங்களுடைய தயாரிப்புகளான மொபைல்ஃபோன் செயலிகள் தகவல்களைத் திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதற்கு டிக் டாக் பிரபலங்கள் நாட்டிற்காக அதனை வரவேற்பதாக தெரிவித்தனர்.. இருந்தாலும் அவர்கள் சற்று கவலையாக தான் இருக்கிறார்கள்.. டிக் டாக் போன்ற வேறு ஏதாவது ஆப் இருக்கிறதா என்று தேடி அதனை பதிவிறக்கம் செய்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும் டிக் டாக் போல எந்த ஒரு ஆஃப்பும் திருப்தி தரும் வகையில் இல்லை என்று தான் சொல்லப்படுகிறது.
தற்போது டிக்டாக்கிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிங்காரி (chingari) உட்பட பல செயலிகளும் அந்த இடத்தை பிடித்தாக வேண்டும் என்று தீவிர முனைப்பு காட்டி வரும் நிலையில், திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர்களும் அந்த வரிசையில் நிற்கின்றனர்.. ஆம், டிக்டாக்கிற்கு மாற்றான சில்5 (chill5) என்ற செயலியை அவர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
திருப்பூரை சேர்ந்த ஹரிஷ்குமார், சௌந்தரகுமார், சந்தீப், கோகுல், வெங்கடேஷ் ஆகிய 5 பேரும் கூட்டாக சேர்ந்துதான் இந்த செயலியை வடிவமைத்துள்ளனர். பார்ப்பதற்கு டிக்டாக் போலவே காட்சியளிக்கும் இந்த செயலி டிக்டாக் போன்றே வீடியோ பதிவேற்றம், பரிமாற்றம் என பல அம்சங்களை கொண்டுள்ளது.
தமிழக இளைஞர்கள் வடிவமைத்திருப்பதால் இதனை மெருகேற்றுவதற்கு பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் உடனே மாற்றியமைக்கப்பட்டு வருவதாகவும், கடந்த வாரம் இந்த செயலியை அறிமுகம் செய்த நிலையில் தற்போது வரை 1000க்கும் மேற்பட்டோர் டவுன்லோடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த செயலிக்கான சர்வர் தளம் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், பயனர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.