Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளை ஏமாற்றி விட்டு… ரொம்ப தொந்தரவு பண்ணுறாங்க… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

வரையாடுகளை தொந்தரவு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடியில் காவல்துறையினர் சுற்றுலாப்பயணிகள் செல்வதை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் தங்கியிருப்பதற்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே காவல்துறையினர் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். இந்நிலையில் தவறான தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு இரு சக்கர வாகனங்களில் வால்பாறைக்கு செல்லும் சிலர் அங்கு உள்ள மலைப்பாதையின் சாலையோரத்தில் நின்று கொண்டிருக்கும் வரையாடுகளை தொந்தரவு செய்துள்ளனர்.

எனவே இந்த வரையாடுகள் மிரண்டு ஓடும் போது மலைப்பாதையில் தவறி விழுந்து உயிரிழக்க கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மலைப்பாதையில் உள்ள சாலையோரங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் வரையாடுகளை அங்கு செல்லும் வாலிபர்கள் தொந்தரவு செய்வதாகவும், சிலர் வரையாடுகளின் மீது கற்களை வீசுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் மிரண்டு ஓடும் வரையாடுகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு வரையாடுகளை தொந்தரவு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |