மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் இருக்கும் கக்கன்ஜி பகுதியை சேர்ந்தவர் வல்லாளகண்டன். கங்கைகொண்டான் அருகே இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே இருக்கும் மாணவியின் வீட்டுக்கு பேட்டையை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். மாணவியிடம் வல்லாளகண்டன் பேசிப் பழகி வந்துள்ளார். மேலும் அந்த மாணவிக்கு புதிதாய் கைபேசி ஒன்று வாங்கி கொடுத்து பழக்கம் நீடித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவியை காணாத பெற்றோர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில் வல்லாளகண்டன் மாணவியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வல்லாளகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் மீட்கப்பட்ட மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.