கோயம்புத்தூர் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின் அவர் பணிபுரிந்த கம்பெனிக்கு செல்லாத காரணத்தினால் அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் இவர் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இந்நிலையில் கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் வசித்து வரக்கூடிய 16 வயது சிறுமி ஒருவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மணிகண்டன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி காதலாக மாற்றினார்.
பிறகு தனியார் நிறுவனத்தில் பணி புரிவதாகவும், கைநிறைய சம்பாதிப்பதாகவும் இப்போது கூட உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி அவரை ஆளில்லாத தனது நண்பரின் வீட்டிற்கு கடத்திச் சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியை காணாத பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில், மணிகண்டன் சிறுமியை கடத்தியது தெரிய வரவே,
வழக்கானது கோவை மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டு பின் தனிப்படை அமைக்கப்பட்டு விரைவாக செயல்பட்ட அதிகாரிகள் மணிகண்டனை கைது செய்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். பின் அவர் மீது கடத்தல் மற்றும் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.