சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருநங்கை போன்ற ஒருவர் பணம் கேட்டு தொல்லை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினார். மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருமுல்லைவாயில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
தகவலையடுத்து, திருமுல்லைவாயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பெண் வேடமிட்ட இளைஞர் ஒருவர் பொதுமக்களிடம் பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்ட வந்துள்ளார். இதைக் கண்ட காவல் துறையினர் ரகளையில் ஈடுபட்ட அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கைது செய்யப்பட்ட இளைஞர் திருமுல்லைவாயல் அனுமன் நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும் அவர் திருநங்கையாக மாறுவதற்கு தேவைப்படும் பணத்திற்காக பொதுமக்களிடம் பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், மணிகண்டனுக்கு இது போல் வேறு ஏதும் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.