காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் சகோதரிக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா வீதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ரூபன். பட்டதாரியான இவர் வீடு கட்டி விற்கும் வேலை செய்துவருகிறார். இவரும் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரூபனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அந்தப் பெண் ரூபனிடமிருந்து விலகி, காதலிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரூபன், இருவரும் காதலித்து வந்தபோது இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்திலும், சமூக வளைதளங்களிலும் பகிர்வதாக மிரட்டியதோடு, அந்தப் பெண்ணின் சகோதரியின் மொபைலுக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண்ணின் சகோதரி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன்பேரில் ரூபனை கைதுசெய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ரூபன் அந்தரங்க புகைப்படங்களைப் பகிர்ந்தது உறுதிசெய்யப்பபட்டது. இதனையடுத்து ரூபன் மீது தகவல் தொழில்நுட்பப் பிரிவு உள்பட இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் காவல் துறையினர், ரூபனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.