காதலிக்க மறுத்ததால் 8ஆம் வகுப்பு மாணவி கழுத்தை அறுக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை பகுதியில் வசித்து வரக்கூடிய நித்தியானந்தம் என்பவர் தனது வீட்டருகே இருக்கக்கூடிய எட்டாம் வகுப்பு படிக்க கூடிய மாணவியை ஒருதலையாக காதலித்திருக்கின்றார். நேற்று இரவு அந்த மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடியிருக்கிறார். அக்கம்பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல நித்தியானந்தத்தின் நண்பரை கண்டுபிடித்து காவல்துறையினர் இரவு முழுதும் விசாரணை நடத்தினர்.
அப்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூருக்கு தப்பி செல்வதற்கு முயன்ற நித்தியானந்த்-தை அனைத்து மகளிர் போலீசார் இன்று காலை கைது செய்திருக்கிறார்கள். கைது செய்தவரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதே போல அவர் பயன்படுத்திய கத்தியை காவல்துறையினர் பறிமுதல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.