சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி அங்கு தடை செய்யப்பட்டிருக்கும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து வருவதுடன், வருவாய்த் துறையினர் உதவியுடன் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் புகையிலைப் பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்பவர்களை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதனை அடுத்து திருக்கோவிலூர் புறவழிச் சாலையில் இருக்கும் மண்டபம் பகுதியில் சந்தேகப்படும்படி வந்த காரை காவல்துறையினர் மடக்கி சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.
பின்னர் விசாரணை நடத்தியதில் அவர் குலதீபமங்கலம் கிராமத்தில் வசிக்கும் சிவகுமார் என்பதும், புகையிலை பொருட்களை கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்ய முயன்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிவகுமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 200 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.