பட்டதாரி இளைஞர் ஒருவர் கையில் அரிவாளுடன் சுற்றியதோடு பலரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ராசிபுரம் அடுத்த பாளைபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோடிஸ்வரன். பட்டதாரியான இவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து விடுதலையாகி உள்ளார். இந்நிலையில் நேற்று மதியவேளை அரிவாளுடன் சுற்றிக்கொண்டிருந்த கோடீஸ்வரன் தனது பெரியம்மா மற்றும் பெரியப்பாவை கடுமையாக வெட்டியுள்ளார்.
இதனை தட்டிக்கேட்ட ஈஸ்வரனின் அத்தை லட்சுமியையும் வெட்டியுள்ளார். இதனால் லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதோடு சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நரேஷ்குமார் என்பவரையும் துரத்தி சென்று வெட்டிய கோடீஸ்வரன், பின்னர் வீட்டிற்குள் சென்று பதுங்கிக் கொண்டார். இதில் பலத்த காயம் ஏற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுச்சத்திரம் காவல்துறையினர் வீட்டில் பதுங்கியிருந்த கோடீஸ்வரனிடம் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தனர். ஆனால் அவர் வெளியில் வருவதற்கு மறுப்பு தெரிவித்ததால் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு கோடீஸ்வரன் இருந்த அறையில் மிளகாய்பொடி ஸ்பிரே அடித்து மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காவல்துறையினர் கோடிஸ்வரனை கைது செய்தனர்.