இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பெத்துல் மாவட்டத்தை சேர்ந்த சந்திப் என்பவர் போபாலில் படித்துக்கொண்டிருந்த சமயம் பெண் ஒருவரை காதலித்துள்ளார். இந்நிலையில் சந்திப்பின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்த்துள்ளனர். அதற்கு சந்திப் கடும் எதிர்ப்பு தெரிவித்து பிடிவாதமாக இருந்துள்ளார். ஆனால் சந்திப்பின் பெற்றோரும் பிடிவாதமாக இருக்க அவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் இச்சம்பவம் பஞ்சாயத்திற்கு செல்ல சந்திப் குடும்பம், அவரது பெற்றோர் பார்த்த பெண்ணின் குடும்பம் மற்றும் சந்திப் காதலித்த பெண்ணின் குடும்பம் என மூன்று குடும்பங்களும் பஞ்சாயத்தில் கூட சமாதானம் பேசப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இரண்டு பெண்களும் சந்திப்புடன் வாழ்வதற்கு ஒப்புக்கொள்ள, அவர்களது திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் இரண்டு மணப்பெண்களின் குடும்பமும் சந்திப்பின் குடும்பமும் பங்கேற்க கிராமத்தினரும் கலந்துகொண்டனர். மூன்று குடும்பங்களும் சம்மதிக்க திருமணம் நடந்து முடிந்த நிலையில் திடீரென அங்கு வந்த காவல்துறையினர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்த குற்றத்திற்காக சந்திப்பை கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.