நாகப்பட்டினத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞரை 4 பேர் தாக்கியதையடுத்து, இந்திய அளவில் ஹேஸ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது
வட மாநிலங்களில் தான் மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்கப்படுகிறார்கள் என்றால் தமிழகத்திலும் இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான். இவர் நேற்று இரவு மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு, அதனை புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.இந்த பதிவை கண்ட அப்பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் ஓன்று ஆத்திரமடைந்து பைசானின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த பைசான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து முகம்மது பைசான் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் அவரை தாக்கிய இந்து மக்கள் கட்சியை சேர்ந்த தினேஷ்குமார், கணேஷ் குமார், மோகன் குமார். அகஸ்தியன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் #Beef4life , #WeLoveBeef #BeefForLife என்ற 3 ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதற்கு ஆதரவாக ஒருவரின் உணவு பழக்கம், தனிப்பட்ட சுதந்திரம் அதில் தலையிடுவது தவறு என்று பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் விலங்குகளை நேசிப்பவர்கள் இப்படி செய்ய மாட்டர்கள் என்றும் இதற்கு எதிராக சிலர் பதிவிட்டு வருகின்றனர்.