விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீரோ. அவரின் தந்தை ஒருவரிடம் கடன் வாங்கி அதை திரும்ப தர முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றார். இந்த கடனை திருப்பி தர அவர் போராடும்போது கடன் கொடுத்தவர், ஹீரோவின் குடும்பத்திடம் மிரட்டல் விடுகின்றார். கடனை கொடுக்க தவறினால் உன்னுடைய தங்கையை என்னிடம் அனுப்பி விடு என தரக்குறைவாக பேசுகின்றார்.
இதனால் ஹீரோ தனக்கு தெரிந்த ஒருவரிடம் உதவி கேட்க அவர் கள்ள பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு சென்று அங்கு முடிந்த அளவிற்கு பணம் சம்பாதித்து, ஒருவேளை விஷயம் தெரிந்து மாட்டிக் கொண்டால் 1 வருடத்திலிருந்து 10 வருடம் வரை ஜெயில் தண்டனை அனுபவித்து பிறகு இந்தியா வந்து குடும்பத்தினருடன் சேர்ந்து வாழு என யோசனை கூறுகின்றார்.
இதன் பின் என்ன ஆனது? அவரின் யோசனை பழித்ததா? கடனை எப்படி திருப்பிக் கொடுக்கின்றார்? என்பதே படத்தின் மீதி கதையாகும். படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் ஸ்ரீ ராஜேந்திர பாண்டியன் நடிப்பில் எவ்வித உணர்ச்சியும் இல்லை. எல்லா உணர்ச்சிகளுக்கும் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். அவர் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
கோவை சரளாவின் நடிப்பு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றது. ஆராவின் நடிப்பு யதார்த்தமாக அமைந்திருக்கின்றது. வித்தியாசமான கதையை இயக்குனர் சக்திவேல் தேர்ந்தெடுத்ததற்கு பாராட்டுகள். இருந்தாலும் திரைக்கதையில் சுவாரஸ்யம் மற்றும் விறுவிறுப்பு இல்லை. கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒளிப்பதிவாளர் முத்துக்குமரன், அவருக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கின்றார். அஸ்வின் ஹெமந்த்தின் பாடல்கள் ரசிக்கும் படி இல்லை.