காதலித்த பெண்ணை திருமணம் செய்யப்போகும் மகிழ்ச்சியில் துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நேற்று முன்தினம் துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கி 18க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள், விமானி என 191 பேர் பயணம் செய்தனர். பயணிகளில் ஒருவரான முகமது ரியாஸ் என்ற 24 வயது இளைஞன் உயிரிழந்ததோடு அவரது சகோதரர் காயங்களுடன் சிகிச்சை எடுத்து வருகின்றார். இந்நிலையில் மரணமடைந்த முகமது ரியாஸ் தனது காதலியை திருமணம் செய்யும் எண்ணத்துடன் துபாயில் இருந்து புறப்பட்டு வந்ததாக அவரது உறவினர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இருக்கும் ஐடியல் கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது தனது ஜூனியரான ஹன்யா என்ற பெண்ணை காதலித்து வந்ததாகவும், ஒரு வருடத்திற்கு முன்பே இருவர் வீட்டிலும் சம்மதம் கொடுக்கப்பட்டு திருமணத்திற்கு முடிவு செய்யப்பட்டதாகவும் ரியாஸின் மாமா ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தாலும் ரியாஸுக்கு விடுமுறை எப்போது கிடைக்கும் என்பதைப் பொறுத்தே தேதியை முடிவு செய்ய காத்திருந்தோம். இதனை தொடர்ந்து ரியாஸ் மற்றும் ஹன்யா குடும்பத்தினர் நெருக்கமாக பழக தொடங்கினார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடக்கவிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பயணத்தடை ஏற்பட்டதையடுத்து திருமண தேதி ஒத்தி வைக்கப்பட்டது. ஜூலை மாதம் ரியாஸின் வருகையை உறுதிப்படுத்திய பிறகு, இந்த மாதம் திருமணத்தை நடத்து வதற்கு இறுதியாக முடிவு செய்தோம். ரியாஸ் வந்ததும் அவரது தனிமைப்படுத்தும் காலம் முடிந்தவுடன் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தது. தான் பயணம் செய்வதற்கான விண்ணப்பத்தில் கூட ஒரு வருடத்திற்கு முன்பு தனக்கு திட்டமிடப்பட்டிருந்த திருமணத்திற்கு செல்வதாகவே குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்தே துபாயில் பணிபுரிந்து வரும் ரியாஸின் மூத்த சகோதரரும் அவருடன் புறப்பட்டு வந்துள்ளார். ஆனால் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய விடாமல் ரியாஸை விதி அழைத்துச் சென்றுவிட அவரது சகோதரர் நிஜாமுதீன் காயங்களுடன் மருத்து மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மசூதியில் ரியாஸுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டு அதில் ரியாஸ் மற்றும் ஹன்யாவின் குடும்பத்தினர் பங்கேற்றனர். அவரது காதலியான ஹன்யா மிகவும் உடைந்து போய் உள்ளார். அவரை சமாதானப் படுத்த தான் வார்த்தைகளே இல்லை என ரியாஸின் மாமா தெரிவித்துள்ளார்